ரோஜர் ஃபெடெரெர்: ஒரு ஆன்மீக அனுபவம்

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
2017இன் மிகவும் கண்கவர்ந்த புகைப்படம்

கவிஞர் கண்ணதாசனின் வரிகளுக்கு மிகவும் இனிமையாக விஸ்வாநாதன்-ராமமூர்த்தி மெட்டமைத்து கொடுத்தனர். P. B. ஸ்ரீநிவாஸின் குரல் பாடலை விண்வெளிக்கே கொண்டு சென்றது. இப்பாடலை கேட்காதோர் இப்பூவுலகில் இருக்க முடியுமா? இனி பிறந்து தான் வர வேண்டும். காலங்களில் வசந்தக் காலமா சிறந்தது என்றரிய பட்டிமன்றம் தான் நடத்த வேண்டும். ஆனால் நம்மிடம் ஒருவர் "உங்களுக்கு பிடித்த பருவம் எது" என்று கேட்டால் சட்டென்று நம்மில் பலர் கூறும் பதில் வசந்தமாகத்தான் இருக்கும். அதுவே இப்பாடலின் எளிமை, அந்த எளிமையே அதன் மேன்மை. இதுபோல் டென்னிஸ் என்று சொன்னால் நம் நினைவுக்கு வருபவர் ரோஜர் ஃபெடெரெர் தான்.

இந்த ஆண்டிற்கு முன்பு யாருக்காவது, ஃபெடெரெர் தான் G.O.A.T, அதாவது டென்னிஸ் விளையாட்டு வரலாற்றிலேயே மிகச் சிறந்த டென்னிஸ் வீரரா என்று சற்றே சந்தேகம் இருந்திருந்தால், அந்தச் சந்தேகத்தை முற்றிலும் நீக்கும்படி தன் திறனை வெளிப்படித்தியுள்ளார். சுமார் ஒன்றரையாண்டிற்கு முன்பு விம்பில்டன் மைய மைதானத்தில் வழுக்கி விழுந்து தனது முட்டியை காயப் படுத்திக்கொண்டார். அப்பொழுது அவரது 35வது பிறந்தநாளிற்கு சரியாக ஒரு மாதமே இருந்தது. 

கிரிகெட்டில் 35 வயதில் சிறப்பாக ஆடுவது, சாதனை புரிவது அவ்வளவு அசாதாரணமில்லை. நம் சச்சினிற்கு 33-34 வயதில், டென்னிஸ் எல்போவிலிருந்து குணமடைந்து வரும்போழுது, அவரை எண்டுல்கர் என்று கூரி பரிகாசம் செய்தவர்கள் பலர். ஆனால் அவர் முழு உடற்பயிற்சி பெற்றவுடன், 2010இல் 37 வயதில் 1562 ஓட்டங்களுடன் 7 சதங்களையும் குவித்தார். கிட்டத்தட்ட 38 வயதில், 2011 உலகக் கோப்பையில் 482 ஓட்டங்கள் குவித்து பேட்ஸ்மென் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தார். இதில் சச்சின் தனிப்பட்டவருமல்ல. கிலைவ் லாயட், இம்ரான் கான், கிராஹம் கூச், பிரயன் லாரா, கோர்ட்னீ வால்ஷ் போல் பல ஆட்டக்காரர்கள் தனது 40வது பிறந்தநாள் அருகில் சர்வதேச அளவில் சாதனை புரிந்தது வரலாறு.

ஆனால் டென்னிஸ், கால்பந்து போல் மனிதரின் அதிகபட்ச திண்மை எல்லையை தொடுகிற விளையாட்டுப் போட்டிகளில் 30 வயதிலேயே பலரின் திறன் வீழ்ச்சியடைய துவங்கிவிடும். தவிர இந்நிலையில் ஒரு சிறு உடலூறு கூட ஒரு முதுபெரும் வீரரின் உத்தியோக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். 1970களில் கென் ரோஸ்வாலும், 2000களில் ஆன்ட்ரே அகஸ்ஸியும் தான் இந்த வயதில் (35-37) இறுதி/அரையிறுதி போட்டிகளுக்கு வழக்கமாக ஆடினர். இந்தக் கட்டத்திலிருந்து ஃபெடெரெர் திரும்பி விளையாட வருவதே சாதனை. திரும்பியபின் ஒன்றல்ல, இரண்டு கிராண்ட் ஸ்லேம் கோப்பைகளை, ஒன்றில் 3 ஐந்து ஸெட்டர்களை தாண்டி, மற்றொன்றில் ஒரு ஸெட்டைக்கூட விடாமல், ஜெயிப்பத்து ஆஸ்சர்யமான பிரம்மாண்ட சாதனை.

ஃபெடெரெரின் சிறப்பு கோப்பைகளும், பரிசுகளும், சாதனைகளும் அல்ல. லேவர், போர்க், ஸேம்ப்ரஸ் போன்ற டென்னிஸ் வீரர்கள் அவர் அவர் காலகட்டங்களில் தன்னையே தனது போட்டியாளர்களுடன் பிரித்து கொண்டார்கள். இந்த டென்னிஸ் உலக ஜாம்பவான்களை விட ஏன் பெடெரெர் சிறந்தவர்? பதில்: ஃபெடெரெரின் நகல்படுத்த முயலாத பாணியும் நளினமும். திறன், வலிமை, திண்மை, ஆற்றல் எல்லாவற்றையும் பயிற்சியால் அதிகரிக்கலாம். ஆனால் எவ்வித பயிற்சியும் பாணியோ, நளினமோ, நேர்த்தியையோ கற்றுக் கொடுக்காது. அது இயல்பான ஒரு விஷயம். கடவுள் பக்தியுள்ளோர் அதை மேலேயிருப்பவனால் தான் அளிக்க முடியுமென்று அடித்துக் கூருவர். 

ஃபெடெரெரை ஒரு டென்னிஸ் வீரரை விட டென்னிஸ் கலைஞர் என்று சொல்வது தான் பொருக்கத்தக்கது. ஒரு கலைஞனின் மிகப்பெரிய பலம் அவன் கற்பனை. ஒரு சாமான்யன் ஏன் ஒரு திறமையான தொழில் நிபுணன் கண்ணிற்கு தென்படாதது ஒரு கலைஞனுக்கு மட்டுமே தெரியும். விம்பில்டன்னில் தாமஸ் பெர்டிச்சுடன் ஆடிய புள்ளி நினைவுக்கு வருகிறது. ஒரு சற்றே மெதுவான இரண்டாம் ஸர்வை சரியா பெர்டிச் யூகித்து, ஆழமாக தனது இரட்டை பின்கையால் குறுக்கே தாக்கினார். அது சரியாக கோட்டின் மீது விழுந்தது. ஃபெடெரெரின் பதில் குறுகியது. பெர்டிச்சிற்கு இது மிக எளிமையான முன்கை வின்னர் அடிக்க வாய்ப்பு. ஃபெடெரெரின் இடப்புறம் குறுக்கே அடித்து முன்சென்றார். வேறு ஒரு வீரர் மருபடியும் கோர்டிற்கு நடுவே பந்தை திரிப்பி எதிராளி தவறு செய்வாரோ என நம்புவர். ஆனால் ஃபெடெரெர் முழுசாக தன் பின்கையை நீட்டி நேரே ஒரு ஃப்லிக் செய்தார். பெர்டிச் திரிசங்கு சுவர்கத்தில் மாட்டிக்கொண்டார். புள்ளி மாமேதை ஃபெடெரெருக்கு!


அடியேன் போல் பலர் இந்த ஆண்டு ஃபெடெரெர் ஆடாமல் ஓய்வு பெற்றிருந்தாலும், அவரைவிட ஒரு உயர்ந்த டென்னிஸ் கலைஞன் இது வரை எவருமில்லை, இனி பிறந்து வரக் கூட வரமுடியாது என எரிகிற கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்வர். ஃபெடெரெரின் விளையாட்டு பாணியுடன் அவர் தனது ரசிகர்களின் உணர்ச்சிகளையும் எதிர்ப்பார்பையும் 36 வயதிலும் குறைக்க அனுமதிப்பதில்லை. தையில் ஆடினால் போதும் என்று கோவில் கோவிலா சென்று அங்கப்பிரதக்ஷிணம் செய்த நிலை போய் கார்த்தியில் அய்யகோ ATP பட்டியலில் முதலிடம் நழுவியதே என்ற வருத்த நிலைக்கு வேறு யாரால் நம்மை கொண்டு செல்ல முடியும்? 

வலைதளத்தில் காணப்படும் ஒரு வரியால் இக்கட்டுரையை முடித்துகொள்கிறேன்.
இந்த பூலோகம் சுமார் 400 கோடி வருடம் பழமையானது, நாம் ஃபெடெரெர் டென்னிஸ் விளையாடும்பொழுது பிறந்திரிக்கிரோம் என திருப்தி  புலகாங்கிதம் அடையுங்கள்!
பின்குறிப்பு - இக்கட்டுரையின் தலைப்பு டேவிட் ஃபோஸ்டர் வாலஸின் 2006ம் ஆண்டின் "Roger Federer As Religious Experience" பதிவு தலைப்பின் தளிர்வான மொழிபெயர்ப்பு. அதை படிப்பது ஒவ்வொரு ஃபெடெரெர் ஃபெனாடிக்கின் கடமை.

Comments

Popular Posts